×

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

அபிராமி அந்தாதி-சக்தி தத்திவம்

‘‘சிறியேன்” இறை அருளைப் பெறுவதற்கு எதிர் திசையில் தடையாக உள்ள பண்புகள் அனைத்தையும் குறிப்பிடவே அந்த பண்புகளைத் தன் மேல் ஏற்றி ‘‘சிறியேன்” என்று குறிப்பிடுகிறார். அந்த பண்புகளை நமக்கு அறிவிப்பதன் மூலம் உபாசனைத் தடைகளை அறிந்து முன்னேற உதவுகிறார். தடைகளை நூறு பாடல் களிலும், ஆங்காங்கு விரவி உடன்பாட்டு வாக்கியமாக அல்லது முரண்பாட்டு வாக்கியமாகப் பதிவு செய்கிறார். உதாரணத்திற்கு ‘அறிவொன்றிலேன்’ (81) முரண்பாட்டு வாக்கியம். ‘மன்னியது உன் திருமந்திரம்’ (6) உடன்பாட்டு வாக்கியம் ஜபமானது அதிகமானால் இறைவியின் இருப்பை அறிவதற்கான உணர்வதற்கான பண்பு மனதிற்குள் ஏற்படும்.

உமையம்மை கனவிலோ அல்லது அரிய வாக்கியங்கள் மூலமாகவே நமக்குத் தோன்றுவாள். நினைவில் அனுபவத்தில் அதன் பயனை அனுபவிப்பர். இது நம்பிக்கையை தோற்றி இறையன்பை வளர்க்கும். இது உடன்பாட்டு முறை பண்பிண்மையை சிறுமை அந்த குணத்தை மிகுதியாக கொண்டிருந்ததால் ‘‘சிறியேன்” என்கிறார்.உபாசனை தடைகளை பற்றி அபிராமி பட்டர் முரண்பாட்டு வாக்கியமாக பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த சிறுமை தன்மை என்ன என்பதை அறிவதே ‘‘சிறியேன்” என்ற பதத்தின் செறிவை நமக்கு உணர்த்தும். உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் மனித மனத்தில் ஒவ்வொரு உணர்வைத் தோற்று விக்கும். அந்த வகையில் பயம், வெறுப்பு, அன்பு என்று பிறரிடத்துத் தோன்றும் பண்பை எளிதில் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

ஆனால் கோயிலில் உள்ள அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியிருக்கும் திரு உருவங்கள் மீது அதே உணர்ச்சி அன்பு, கோபம், வெறுப்பு எல்லாம் தோன்றினால் அது தான் தெய்வீக உணர்வு. அது அவ்வாறு தோன்றாது இருப்பதைத் தடை என்கிறார். இதையே ‘உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்’ (1) என்பதால் அறியலாம். அனைவரும் அவரவர்களின் பல கடமைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். அந்த கடமைகளை பற்றியே சதா யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

உதாரணமாய் பொருளைத் தேடுவதற்கான முயற்சியில் இறங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இந்த இயக்கத்தின் மிகுதியே அருளுக்கு தடை. ஒன்றையே நினைப்பதனால் பிறிதொன்றை மறக்கின்ற இயல்பு ஏற்படுகின்றது. பொருளை நினைப்பதனாலேயே கருமத்தைப் பற்றி நினைவின் மிகுதியினாலே அருளைப் பற்றி நினைப்புக்குத் தடை வருகிறது. இதையே ‘கரும நெஞ்சால்’ (3) என்பதனால் அறியலாம். புலன்களுக்குப் புலப்படுவதையே நாம் அறிவு என்கின்றோம். புலன்களுக்கும், மனத்திற்கும் புலப்படாத ஒன்றைப் பற்றி மானுடம் சிந்திக்க வாய்ப்பில்லை என்கின்றார் பட்டர்.

அந்த வகையில் ‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரூ மூர்த்தி’ (87) என்பதால் புலன் களாலும் மனதாலும் பற்றி அறிய முடியாததாக உமையம்மையின் இயல்பு இருப்பதால் அதைப் பற்றி அறிய இயலவில்லை அதுவே உபாசகனுக்குப் பெரிய தடையாக உள்ளது. அந்த தடையாகிற சிறுமையையே ‘‘சிறியேன்” என்றார். உலகியல் இன்பங்களில் உழன்று, உயர்ந்த அன்பு, இன்பத்தை அறியாது. அறியாமையில் மகிழ்வது என்பது உபாசனைக்கு மிகப் பெரிய தடை ‘மண்ணளிக்கும் செல்வமோ பெறுவர்’ (15) உயர்ந்த இன்பத்தைப் பெற வேண்டும்.

ஆனால் மண்ணளிக்கும் செல்வமாகிய அழகு, புகழ், சந்தானம், தொகை தரும் பதினாறு பேறும் என்று உலகியல் இன்பத்தை நாடுவது உபாசனைக்குத் தடை அதையே ‘அறியேன்’ (16) என்று சிறுமைக்கு ஆசைப்படுவதையும் சூட்டினார். இறையருளைச் சந்தேகப்படுவதை ‘அவ்வியம்’ (18) என்றும் உலகியல் துன்பத்தைக் கண்டு அஞ்சுவதை ‘எனைநடுங்க அழைக்கும் பொழுது’ (33) சுடுசொல், பொய் பேசுவது, உபாசனைக்குத் தடையாக அமையும்.

இதை ‘புன்மொழி’ (26) என்றும், ஆசை [காமம்], சினம் [கோபம்], பற்று [கோபம்], மயக்கம் [மோஹம்], ஆணவம் [மதம்], பொறாமை [மாச்சர்யம்] என்ற மனதிலே உள்ள அறு வகை அழுக்கும் உபாசனைக்கு தடை இதை ‘நெஞ்சத்து அழுக்கை எல்லாம்’ (27) என்றும் மனம் பழகியதன் அடிப்படையில் கருத்தை சிந்திக்கும். சூழலை சார்ந்து அமையும் சூழல்ச் செயல் சார்ந்து அமையும் செயல் சுகதுக்கம் கொண்டு அமையும், இவைகளையெல்லாம் சேர்ந்து மனிதனுக்கு புறப் பொருளை சார்ந்து தோன்றும் உணர்விற்கு “வாசனா மலம்” என்பது பொருள். இதனினும் முற்றிலும் வேறானது உமையம்மையை தரிசிப்பதனாலும் ஜபம் செய்வதனாலும், வரக்கூடிய ஞானம் என்பது வேறு இந்த ஞானம் தோன்றுவதற்குத் தடையாக இருப்பது வாசனாமலம்.

இதையே ‘என் மனத்து வஞ்சத்து’ (36) என்பதனால் வாசனாமல ஞானத்தையும், இருள் ஏதுமின்றி என்பதனை உமையம்மையின் அருளினால் பெறப்படும் ஞானத்தையும் வேறுபடுத்திக் காட்டுகிறார். இது ஒன்றிற்கு ஒன்று முரணானதும் தடையானதும் ஆகும். ‘பேதை நெஞ்சில்’ (40), ‘தீமை நெஞ்சில்’ (43), ‘வஞ்சகர் நெஞ்சடையாளைத்’ (84), ‘மிண்டு’ (45) என்ற வார்த்தையால் உபாசனைக் தடையான சிறுமைப் பண்புகளையெல்லாம் “சிறியேன்” என்கிறார்.

“நின் மலரடிச்செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன்”இந்த வரியைப் புரிந்துகொள்ள உதாரணம் மிகவும் முக்கியம். ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் உண்டான அன்பு, அனுபவம், அறிவு சார்ந்த பண்பில் ஒப்புமைப்படுத்தி குழந்தை அறிவு, குழந்தை அன்பு, குழந்தை அனுபவம், தாய் அறிவு, தாய் அன்பு, தாய் அனுபவம், இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை அறிந்து கொள்வதால் இந்த வரியின் விளக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அபிராமியின் நோக்கில் அபிராமிபட்டரும், பட்டர் நோக்கில் அபிராமியும் என இரு நோக்கத்தையும் கொண்டு நோக்கத்தக்கது இந்த பாடல்வரி “வல்லபம் ஒன்றறியேன்” என்பதனால் உபாசனை பலத்தையும் “சிறியேன்” என்பதனால் பலவீனத்தையும் குறித்த பட்டர். உபாசகர்கள் இந்த இரண்டையும் எண்ணி அபிராமி சமயம் மிகவும் கடினமானது என்று நினைத்து பின்பற்றாது பிற சமயம் செல்லக் காரணமாகி விடும் என்பதனால் ஒரு எளிய யுக்தியை நடைமுறை சாத்தியப் பண்பை மக்களுக்கு உணர்த்தவே தன்னை மகவுபோல் கருதி அபிராமியை தாயாக கருதி அருளைப் பெறும் வழியை சுலபமாக்குகிறார்.

எப்படி என்பதைச் சற்று விரிவாக சாஸ்திர உதவியுடன் இனி காண்போம்.சாக்த உபாசகர்கள் உமையம்மையைத் தாயாக கருதி வழிபடும் பாவனையை மகன்மை நெறி என்று குறிப்பிடுவார். இதற்கு தலையாய சான்றாக ஸஹஸ்ரநாமம் முதல் நாமாவளி ‘ஸ்ரீமாதா’ என்பது அபிராமி பட்டரோ ‘உமை மைந்தனே’ (1) என்று கணபதியைத் தனித்து வர்ணிக்காமல், தாய் தந்தையுடன் கூடிய மகவாகவே வர்ணித்தார் அதற்குக் காரணம் இந்த மகன்மை நெறியே. அவர் அந்தாதியில் ‘அன்னை’ (44), ‘அம்மே’ (9), ‘தாயே’ (61), என்ற சொற்களையெல்லாம் பயன்படுத்திய பாடல்களில் தாயைப் பற்றி மகனின் அறிவு, அன்பு அனுபவத்தை வெளிப்படையாக பிறரை பின்பற்றி இறை அருள் பெறும் நெறியாக விளக்கியிருப்பதை கொண்டு அறியலாம் உமையம்மையை உயிரையீன்ற தாயாகக் கருதுகின்றார் பட்டர்.

மேலும், உபாசனை நெறியில் தாயாகவே பலமுறை காட்சி அளித்திருக்கிறாள். அதனாலேயே ‘பெற்ற தாயும்’ (2) என்கிறார் பட்டர். உலகியல் தாய் வறுமையில், துன்பத்தில், இல்லாமையில் தன் மகனை தன்உயிரினும் மேலாக நேசித்தாலும் காக்கும் வல்லமை பெற்றவர் களாக இல்லை, உலகியலில் தாய் எப்பொழுதும் தன்மகவுடன் எப்பொழுதும் இருக்க இயலாத நிலை உள்ளது. ஆனால், உமையம்மையோ தன் மகவை எவ்விடத்திலும், எப்பொழுதும் காத்து ரட்சிக்கும் பேராற்றல் உடையவளாக இருக்கிறாள்.

அதையே ‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின போல் அருள் கூர்’ (9) என்பதை ‘எந்தை தன் கண்ணன’ (9) சிவபெருமானுக்கே மனைவியாகிற பேராற்றலையும், ‘செங்கை சிலையும், அம்பும் முருத்தன மூரலும்’ (9) என்பதனால் எங்கும் பரந்திருப்பவளாகவும் எப்பொழுதும் காக்கும் பண்புடையவளாகவும், குழந்தையை விழிகளுக்கு மறைந்திருந்தாலும் குழந்தையையே கவனித்துக் கொண்டிருக்கிற உயர்ந்த பண்பை பெற்றவள் அதனாலேயே ‘நீயும் வந்து அம்மே என் முன் நிற்கவே’ (9) என்பதனால் அறியலாம். உம்மையானவள் ஒருவர் இருவர் என்றில்லாமல் உலகம் அனைத்தும் வணங்குகின்ற ஒரே தாய் என்பதை `அன்னே உலகுக்கு’ (25) என குறிப்பிடுகிறார்.

துன்பம் மிகுந்த இந்த காலத்தில் குழந்தைகள் தன்னைக் காக்கும் அன்னையை நாடிச் செல்வது போல், துன்பத்தை மிக மிக விரைவாக போக்க வல்லவள் என்பதை அபிராமிபட்டர் நன்கு அறிந்ததே. ‘உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே’ (33) அனைத்தையும் ‘படைத்தும் காத்தும்’ (26) அருளும் சிவபெருமானுக்கே ‘அன்னையும் ஆயினள்’ (44) அனைத்துத் தீங்குகளையும் போக்க வல்லவளை ‘ஆத்தாளை’ (நூற்பயன்) என்பதனால் அறியலாம்.

இந்த வகையில் உமையம்மையாகிற தாயைப் பற்றி மகவான அபிராமிபட்டர், தான் துன்பப்பட்டபோது ஓடி வந்து உதவுவாள், ‘வெறுக்கும் தகைமைகள்’ (46) செய்தாலும் தன் மீது ஒரு சிறிதும் கோபப்பட்டு விலக்கமாட்டாள். உலகியல் தாய் போலக் காப்பாற்ற முடியாமல் கலங்கி நிற்க மாட்டாள் மாறாக காப்பாள் என் ஒருவனுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் அருளக் கூடிய பெரும் கருணை உடைய பேரருள் கொண்ட இத்தகைய பண்புகளை யெல்லாம் மனதில் நினைத்துப்பார்து அவளைப்பற்றி அன்பு கருணை, எல்லாவற்றையும் உணர்ந்தே மிக மிக மென்மையான, மிகக் குளிர்ச்சியான, மிகமிக சிவந்த மலர் போன்ற, மா இலை தளிர் போன்றவளாய் வணங்கியதனால் சிவந்த தன் தாயாகிய அபிராமியின் திருவடியின் மேல் எனக்குத் தேவையான அனைத்தையும் அதுவே அருளும், என் குற்றம் குறைகளை பார்க்காது அருளும், உடனடியாக அருளும், சத்தியமாக அருளும், என்ற உள் உணர்வுகளால் உயர்ந்த திருவடியை பற்றுதலின்றி வேறு எதையும் அறியாது. இதையே “செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன்” என்றார்.

“பசும் பொற்பொறுப்பு, வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்”பொன் என்றால் தங்கம் என்று பொருள். பொன், வெள்ளி, இரும்பு, ஈயம், தாமிரம் இவை ஐந்தின் கலவையே ஐம்பொன். மூலிகையால் தாமிரத்தை தங்கமாக மாற்றுவது செம்பொன் எனப்படும். ஞானசம்பந்தர், அப்பர் புகழ்த்துணை நாயனார் போன்ற அடியவர்களுக்காக இறைவனே கொடுத்த தங்கத்திற்கு சம்புவ ராகம் என்று பெயர் [சம்புசிவன், வராகன்- காசு], பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் தாலி போன்ற மங்களகரமான ஆபரணம் செய்யப் பயன்படுகிறது.

இன்றைய 916, 24 கேரட் போன்ற தூய்மையுடையது மலைகளில் மட்டும் காணப்படும் தங்கம் பசும்பொன் எனப்படும். இந்த ஐந்து வகை தங்கத்தையும், இங்கு குறிப்பிடுகிறார். அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.ஐம்பொன் பொதுவாக ஆலயங்களில் உள்ள உலாத்திருமேனிகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டிருக்கும். உதாரணம்; ஆடிப்பூரத்தம்மன் [சுக்ரவார அம்மன் என்று மக்களால் அழைக்கப்படுகிறது] என்ற பெயரில் அபிராமி சந்நதியின் தெற்கு நோக்கி உள்ள உமையம்மையே இங்கு குறிப்பிடுகிறார்.

இதை வணங்குபவர்களுக்கு உடல் நலம் கிட்டும் மகாவிஷ்ணு தன் ஆபரணங்களையே ஒன்றுசேர்த்து அபிராமியாக வடித்து வழிபட்டார் என்கிறது தல புராணம் அதையே பட்டர் ‘நகையே’ (93) என்கிறார். திருமணமான ஒவ்வொரு பெண்னும் தன் கணவனை உயிராகக் கருதுவதும் தலைவன் தன் தலைவிக்கு அணிவிப்பதும் சிவன் தன் பக்தர்களான சம்பந்தர், அப்பர், போன்றவர்களுக்கு அளித்ததைப் போலவே தன்னை வழிபட்ட உமையம்மையை தான் மணக்கும் போது தானே தோற்றுவித்த தங்கமான சம்புவராகனால் ஆன தாலியை, அணிவிக்கிறார், அதையே ஸஹஸ்ரநாமம் ‘காமேச பத்த மாங்கல்ய சூத்திரசோபித கந்தராயை’ என்பதனால் அறியலாம்.

பட்டர் இதையே ‘உங்கள் திருமணக் கோலமும்’ (18) என்கிறார். அபிராமி பட்டரின் பொருட்டு அமாவாசையை பௌர்ணமியாக மாற்றுவதற்காக நவரத்தினம் பதித்த தன் ஸ்ரீசக்கர வடிவிலான தாடங்கத்தை உமையம்மை வானில் எறிந்து அதையே நிலவொளியாக காட்டினாள். அந்த தாடங்கமானது கோகனகம் என்ற தங்கத்தால் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்தன்று ஒவ்வொரு மூலவர் [கருங்கல் விக்கிரகத்தின்] சிலையின் கீழ் [மந்திர எழுத்துக்களுடன் கூடிய உலோகத்தால் ஆன தகட்டை வைப்பர். இது இறைவனுடைய கருத்தை வழிபாடுசெய்விப்போருக்கு அறிவுறுத்தும்] திருக்கடையூரில் அபிராமிபட்டர் காலத்தில்

அபிராமிக்கு செய்த கும்பாபிஷேகத்தில் வைக்கப்பட்ட ஸ்ரீசக்ரமானது தாமிரத்தில் இருந்து இரசவாதத்தால் மாற்றப்பட்ட தங்கத்தால் ஆனது. இதை செம்பொன் என்று குறிப்பிடுவர்.
பொதுவாக சிற்ப சாஸ்திரங்களின் கூற்று படி மூலவர் [கருங்கல் திருமேனி] விக்ரஹமானது ஆண்கல், பெண்கல், அலிக்கல் போன்ற மூவகையில் ஒன்றை தெரிவுசெய்து வடிப்பர். அந்த முறைப்படி பெண் கல்லால் செய்யப்படவேண்டிய விக்ரஹகம் உமையம்மையின் திருமேனி.

அதிலும் அதிக நாள்பட்ட பச்சை நிறத்தில் உள்ள மலையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட உயர்ந்த வகை கல்லினால் [மரகதப்பச்சை என்று கூறுவர்] செய்யப்பட்ட மூலவர் விக்ரஹகத்தையே அதாவது அபிராமியின் திருமேனியையே பட்டர் இங்கு “பசும்பொன்” என்று குறிப்பிடுகிறார். “பொருப்பு” என்பதால் மலையைக் குறிப்பிட்டார். மலை என்பது ஆறு வகையில் சிவபெருமானோடு தொடர்புடையது.

கைலாசமலை சிவபெருமானின் இருப்பிடம், மேருமலை சிவ பெருமானுடைய வில், செம்மலை, [திருவண்ணாமலை] மலையை சிவபெருமான், வேதாச்சலம் சிவபெருமானைச் சுமக்கின்ற நந்தியாகிறமலை சிவபெருமானை ‘கிரிசர:’ மலைவாசி என்னும் திருப்பரங்குன்றத்து மலைத் தலைவன் என்றும் வேதத்தின் ருத்ரப் பகுதியில் குறிப்பிடப்படுகிறது. மலை என்பது சிவ பெருமானின் தலைசிறந்த பக்தனான இமவானையும் குறிக்கிறது.

மலை என்பது சிவபெருமானின் மாமனார் வீடு. இவையாவற்றையும் மனதில் கொண்டே முன்னர் சொன்ன “பசும்பொன்” என்பதையும் இணைத்து “பசும் பொற்பொருப்பு” என்ற வார்த்தையால் மலைமகளோடு, மலை வில்லை தாங்கிய, மலைத் தலைவனான, கைலாய மலையில் வீற்றிருக்கும் மலை வடிவமான சிவபெருமானையும் பார்வதியையும் சேர்த்தே “பசும் பொற்பொருப்பு வில்லவர்” என்கிறார்.

“வீற்றிருப்பாய்” என்பதனால் திரிபுர சம்ஹாரத்தை முடித்து கைலாசத்தில் வீற்றிருந்த தேவர்களின் குறைதீர்த்தருளிய திருக்கோலத்தை குறிப்பிடுகிறார். இதையே ஆகமங்கள் கைலாசநாதர் பார்வதி என்ற பெயரால் குறிப்பிடுகிறது. இந்த கோலத்தையே இராவணன் கைலாச மலையை தூக்குவதுபோல் அமைந்திருப்பர். சிவபெருமானுக்கு நடத்தப்படும் பத்து நாள் விழாவில் கைலாச காட்சி என்று இன்றளவும் கோயில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கடவூர் ராஜகோபுரத்தில் மிகச் சிறப்பாக இத்திருக்கோலம் வடிக்கப்பட்டுள்ளது.

ம்ருத்யுஞ்ஜயர் கைலாச மலையில் வீற்றிருப்பதாக ஆகம தியானம் குறிப்பிடுகிறது. அதையே அபிராமி பட்டரும் இங்கே குறிப்பிடுகிறார். இதை ‘கைலாச கமனீய ரத்ண கச்சிதே கல்பத்ரு மூலே ஸ்திதம்….ம்ருத்யுஞ்சயம் பாவயேத்’ என்ற திருக்கடையூர் பூஜை விதியில் உள்ள தியானத்தினால் அறியலாம். இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய கல்ப விருக்ஷத்தின் நிழலில் சிவபெருமானும் பார்வதியும் கைலாசத்தின் சிகரத்தில் அமர்ந்திருந்தனர் என்ற பொருண்மை உடைய இவ்வரியால் “பசும் பொற்பொருப்பு, வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்” என்கிறார்.

“வினையேன்” ஞானத்தை அடைய ஆன்மாவானது உடலை எடுக்கிறது. உடலோ வினையின் வழி தோன்றுவது, வினையானது பாவம் புண்ணியம் ஞானம் என்ற மூன்றாகவும் உள்ளது. மேலும் சஞ்ஜிதம் [செல் வினை] ப்ராரப்தம் [நிகழ்வினை] ஆகாம்யம் [எதிர்வினை] என்று மூன்று வகையான வினையாலேயே ஆன்மாவிற்கு உடல் கிடைக்கிறது. வினையின் அடிப்படையிலேயே ஆன்மா எடுத்துக் கொள்ளும் உடலானது தோன்றி வளர்ந்து வாழ்ந்து மடிகிறது.

வினையின் அடிப்படையிலேயே சுகதுக்கத்தை அடைகிறது என்பதை அபிராமியின் வழிபாட்டு நூலின் [சாக்தாகமம்] வழி வினையே உடல், உடல் வினையன்றி வேறில்லை என்ற பொருளில் ‘தேஹ ப்ராப்தம் ஏவோக்தம், ப்ராரப்தம் தேஹம் ஏவஹி’ என்ற சாக்தாகம வரிகளால் நன்கு உணரலாம். வினையைப் பற்றி அபிராமிபட்டர் ‘இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது’ (33) என்பதனால் மனிதர்கனின் செயல்பாட்டின் வழியே காலன் வருவான் [மரணம் வந்து சேரும்] என்பதை கூறுவதிலிருந்து அறியலாம். இத்தகைய உண்மையை உணர்த்த அபிராமிபட்டர் தன்னையே “வினையேன்” என்கிறார்.

“தொடுத்த சொல்” என்ற வார்த்தையால் உமையம்மையைப் பற்றி தன்னால் சொல்லப்பட்ட இக்கவிதை வடிவத்தில் முதலும் முடிவுமாய் இணைக்கப்பட்டு முறையாக இலக்கணத்தின் வழி சொல்லப்பட்ட இச்சொற்கள் பலவற்றினை தொடுத்ததால் [இணைத்ததால்] தோன்றியதை “தொடுத்த சொல்” என்கிறார். சொற்களுள் மிக உயர்ந்த வேதம், அதை பதம், க்ரமம், ஜடை என்ற முறையில் சொல்லிக் கொடுப்பார்.

இதையே பட்டர் ‘சுருதிகளின் பணையும்’ (2) என்கிறார். சொற்களில் வேத ரகசியங்களை மறைத்து சொல்லப்பட்டது வேதம் என்பதையே ‘எவரும் அறியா மறையை’ (2) என்கிறார். ‘பண்ணளிக்கும் சொல் பரிமளை’ (15) என்பதனால் செவிக்கினிய சொல்லும் உள்ளத்திற்கு இனிய பொருளும் கொண்டு செய்யப்பட்டது. சொற்களின் வடிவமாகவே திகழக்கூடிய சிவபெருமான். பொருளின் வடிவமாகத் திகழ்பவள் உமையம்மை.

சொல்லையும் பொருளையும் இணைத்து உருவாகும் பண்பின் வடிவாகவே நடமாடும் நடராஜர் சிவகாமி என்கிறார். சிதம்பரநடராஜர் வடமொழி சொல்லிலக்கணத்தை வகுத்தவர். அகப்பொருள் இலக்கணத்தை வகுத்தவர் மதுரை நடராஜர் இருவரும் இணைந்து என்பதனால் நடராஜர் சிவகாமியாகவே இருக்கும் இத்தகைய உன்னைப் பற்றிய உண்மையை சொன்ன உயர்ந்த சொல்லையே தேர்ந்தெடுத்து [மலர் தொடுப்பது போல] எழுத்துக்களை பாக்களை உருவாக்கியதை “தொடுத்த சொல்” என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் appeared first on Dinakaran.

Tags : Abraami Anathathi-Shakti Pathiva ,
× RELATED திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள்